செவ்வாய், 10 நவம்பர், 2015

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.வாசிப்பே நமது சுவாசிப்பு என உறுதி ஏற்போம்.

செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம். எழுத்தறவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கம். எழுதப் படிக்க தெரிந்த அனைவரும் எழுத்தறிவு பெற்றோரே. ஆனால் வாழ்வை வளப்படுத்த எழுத்தறிவு மட்டும் போதுமா என்றால் போதாது. எழுத்தறிவு கல்வியின் முதல்படி .தொடர்ந்து படிப்பதன் மூலமே படிப்படியாக முன்னேற முடியும். எரிந்து கொண்டிருக்கும் விளக்கே வெளிச்சத்தைக் கொடுக்கும். பிற விளக்குகளை ஏற்றி வைக்கும்.
ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 23ஆம் தேதியை ‘உலக யுத்த தினமாகவும்’, இந்த நூற்றாண்டின் முதல் ஆண்டாகிய 2001ஐ ‘உலக புத்தக ஆண்டாகவும்’ அறிவித்தது. இந்திய அரசும் 2001ஆம் ஆண்டை புத்தக ஆண்டாக அறிவித்து வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கவும் நூலகப் பயன், நூலக அறிவு அனைவருக்கும் கிடைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த தினத்தை கொண்டாடுகின்றன. ஏப்ரல் 23ம் தேதியின் முக்கியத்துவம் என்னவென்றால் அது வில்லியம் ஷேக்ஸ்பியருடைய பிறந்த மற்றும் மறைந்த தினமாகும்.
மற்ற உயிரினங்களின் வாழ்க்கையில் தலைமுறைகள் மாறினாலும் வாழ்க்கை முறைகள் மாறாமல், தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் மீண்டும் தொடங்குகிறது. ஆனால் மனிதனின் வாழ்க்கை மட்டும் தான் ஒரு தலைமுறை விட்ட இடத்திலிருந்து அடுத்த தலைமுறை வாழ்க்கையை தொடங்குகிறது. மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வரலாறாக நூல்களில் பதிவு செய்து செல்வதில் காரணமாகத்தான் இது சாத்தியமாகிறது.
வாசிப்பது ஓர் அற்புத அனுபவம். அது புதியதொரு உலகைத் திறந்து காட்டும். பல புதிய அரிய தகவல்களை அள்ளித்தரும். நாடுகளின் எல்லைகளையும், வரலாற்றையும் மாற்றி அமைக்கும் மகா பலம் பொருந்தியது. புத்தகங்கள். பல புத்தகங்கள் உலகையே உலுக்கி எடுத்துள்ளன.
வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி, நினைவுத் திறனை அதிகரிக்கிறது. படிப்பவர்களின் கற்பனையையும் அறிவையும் புத்தகம் வளர்க்கிறது. காட்சி ஊடகங்களைப் போல புத்தகத்தில் உள்ளவை ஒரு முறையுடன் மறந்து விடுவதில்லை. அது காலம் காலமாக புதிய புதிய அர்த்தங்களைத் தந்து கொண்டே இருக்கும்.
வாசிப்புத்திறன், செய்யும் தொழிலில் ஆழ்ந்து கவனம் செலுத்தும் திறனை வளர்க்கும். வாசிப்பதால் கிடைக்கும் அனுபவங்களும் எண்ணங்களும், இதுவரை அறிந்தவற்றின் எல்லைகளை விரிவாக்கி மேலும் சிந்திக்க வைக்கும். புதிய தகவல்களை எளிதில் கிரகிக்க முடியும். தகவல்களை வகைப்படுத்தி, தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள துணைபுரியும் சுருங்கச் சொன்னால், வாசிப்புத் திறன் ஏனைய திறன்களை வளர்க்க வல்லது.
பாட நூல்களைப் படிப்பது பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெறுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் குறித்த பல அறிஞர்களின் கருத்துக்களை வழங்குகிறது. ஒருவனது வாழ்வு நல்வாழ்வாக அமைய அடித்தளம் அமைப்பது அவனது நற்குணங்களே. அந்த நற்குணங்களை தேடித்தருவதில் பெரும்பங்கு வகிப்பது நூல்களே.
நூலகம் என்பது அறிவுச் செல்வத்தின் சேமிப்புக் கிடங்கு. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து வைக்கும் சிந்தனைப் பாலம். எதிர்காலத்தை கணித்துச் சொல்ல உதவும். அறிவார்ந்த ஜோதிடர் ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்த அறிஞனும் நூல்களின் வாயிலாக நம் நெஞ்சருகே வந்து உரையாடுவார். நம் நெஞ்சத்தை உழுது பண்படுத்துவார்.
படிப்பில் ஆழ்ந்த படிப்பு, அகன்ற படிப்பு, என இருவகை உண்டு. பொதுத்தேர்வுக்குப் படிப்பதை ஆழ்ந்த படிப்பு என்றும் போட்டித் தேர்வுக்கு படிப்பதை அகன்ற படிப்பு என்றும் கொள்ளலாம். அதே போல சீரிய படிப்பும் உண்டு. பொழுது போக்கு படிப்பும் உண்டு.
பள்ளியில் படிக்கும் நூல்களால் மட்டும் மாணவர் பரந்த அறிவைப பெற்றுவிட முடியாது. நூல் நிலையத்திலுள்ள இலக்கியம், வரலாறு, அறிவியல் முதலான பலதுறை நூல்களை எடுத்துப் படித்து மாணவர் தம் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். நாவல், சிறுகதை இவற்றை மட்டும் படிக்காமல் சான்றோர் வரலாறு, தன்வரலாறு, அறிவியல் சமூகவியல் முதலான பல்வேறு நூல்களைப் படிக்க வேண்டும்.
ஒரு மாணவன் நூலகம் சென்று பாட நூல்களோடு பிறநூல்கள், மாத இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவற்றை கற்று வந்தால் நிச்சயம அவன் பல்துறை அறிவுடைய சிறந்த மாணவனாக வருவான். வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழக்கூடிய ஒன்று. ஒரு பயிர் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தால் மட்டுமே அது நல்ல முறையில் வளர்ந்து பலன் கொடுக்கும். அதுபோல மாணவர்களின் வளர்ச்சியும் சீராக அமைந்து உரிய பலன் கிடைக்க நூல்களை படிப்பதை அன்றாடப் பணியாகக் கருத வேண்டும். நாள்தோறும் ஐம்பது பக்கங்களாவது படித்து விட்டுத்தான் படுக்கச் செல்வது என்று உறுதி மேற்கொள்ள வேண்டும்.
புத்தகத்தை திறக்கும்போது நல்ல அம்சங்கள் அதனுடைய ஒவ்வொரு பக்கத்திலும் ஊற்றெடுக்கின்றன. நல்ல ஆலோசனை, அருமையான போதனை வாழ்க்கையின் உண்மைகள் ஆகிய அனைத்தும் நமக்குக் கிடைக்கின்றன. புத்தகங்களைப் படிக்கப் படிக்க உங்களையே அறியாமல் அந்த நூல்களிலிருந்து பெற்ற நல்ல செய்திகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். அது உங்கள் மீதுள்ள எண்ணத்தையும் மதிப்பையும் உயர்த்தும்.
மருத்துவ ரீதியாகவும் நூல்களைப் படித்தல் மனதை மென்மையாக்கும். இரத்த அழுத்தம் உள்ளவரிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னால் சிறிது நேரத்தில் ரத்த அழுத்தம் குறைந்திருக்கும். என்கிறது மருத்துவ அறிக்கை. எனினும் புத்தகங்களை ஒரு நல்ல ஆலோசகராக வைத்துக் கொள்ள வேண்டுமே அன்றி எஜமானாக கொள்ளக்கூடாது.
நூலகங்களைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நூலக புத்தங்களில் குறிப்புகள் எழுதுவதோ தாள்களை மடிப்பதோ, கிழிப்பதோ, எச்சில்தொட்டு புரட்டுவதோ கூடாது. ஒரு மலரைக் கையாள்வது போல் மென்மையாகக் கையாள வேண்டும்.
மனிதனுக்கு மூளை இயல்பாகவே வளரும். ஆனால் அறிவு வளர வேண்டுமெனில் வாசிப்பும் அவசியம். காவியங்கள் ஒருவனை உற்சாகமுள்ளவனாக்குகின்றன. கணக்குகள் நுண்மை உடையவனாக்குகின்றன. நீதி நூல்கள் கண்டிப்பானவனாக்குகின்றன. தர்க்க நூல்கள் வாதிடக் கூடியனாக்குகின்றன.
பகுத்தறிவுக்கு விருந்தளிக்கும் இடம் நூலகங்கள், நூல்களை கற்று தெளிவுறும் போது மனிதன் மூடப்பழக்க வழக்கங்களை விட்டொழித்து சுயமரியாதையாக வாழ முன் வருகிறான். நூலகங்கள் தெய்வீக ஆலயங்களாகத் திகழ்கிறது.
கிரேக்க நாட்டு சிந்தனையாளன் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டு விஷம் தனக்கு கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டிருந்தார். லிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றை அவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக 2 ஆயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்கு 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளிவிவரம் கூறுகிறது.
வாசிப்பதை சுமையாகக் கருதாமல் சுகமானதாக எண்ண வேண்டும். புதிதாய் கிடைக்கும் புத்தகம் புதுக்கவிதை போன்றது. புதுக்கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அதுபோல புத்தகத்தை உட்கார்ந்து கொண்டே படிக்கலாம். கொஞ்சம் சாய்ந்து படுத்தபடி படிக்கலாம். மின்சாரம் இல்லையென்றாலும் படிக்கலாம். வாய்விட்டும் வாசிக்கலாம். மனதுக்குள்ளும் வாசிக்கலாம். கதாபாத்திரங்களை மனதுக்கு ஏற்றபடி உருவகிக்கலாம். வேண்டாதபோது கீழே வைத்து விடலாம். அது கோபித்துக் கொள்ளாது. மொத்தத்தில் படிக்கும் இன்பத்தை வார்த்தைகளில் சொல்லிமாளாது.
புத்தகம்… அது ஒரு பொய்கை; மனம் அதில் நீராடித் தூய்மை அடைகிறது. அது ஒரு தேன்கூடு. ஆயிரமாயிரம் பூக்களின் தேன் அதில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு உயிர்; அதில் முன்னோர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது ஒரு கண்ணாடி; அதைப்பார்த்து அகத்தை அழகுப்படுத்திக் கொள்ளலாம்.
புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாசலைத் திறக்கிறான். புத்தகத்தின் பக்கங்கள் வெறும் காகிதங்கள் அல்ல. நாம் அறியாத உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் அதிசயச் சிறகுகள்.
புத்தகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ‘சீகன் பால்கு’ என்ற ஜெர்மானியர். டென்மார்க் மன்னர் பிரடெரிக் – 4 என்பவால் தரங்கம்பாடிக்கு 1706ல் அனுப்பப்பட்ட இறைத்தொண்டர். தம் கைப்பட எழுதிய தமிழ் எழுத்துக்களை ஜெர்மனிக்கு அனுப்பி முதல் முதலில் காகிதத்தாளில் அச்சு இயந்திரம் கொண்டு அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ் நூலான ‘பைபிளின் புதிய ஏற்பாட்டை’ வெளியிட்டவர்.
புத்தகத்திற்கு ஏற்புடைய செந்தமிழ்ச் சொல் ‘நூல்’ என்பதாகும். திருவள்ளுவர் ‘நவில் தோறும் நூல் நயம் போலும்’ (783) ‘நிரம்பிய நூலின்றிக் கொட்டிக் கொளல்’ (401). ‘நுண்ணிய நூல் பல கற்பினும்'(373) ‘நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ (322) என்று படித்தறியும் நூல்கள் அடங்கிய இடத்தை, அதாவது நூல் அகத்தை அவற்றின் பயனை, மாட்சிமையை அழகுற எடுத்துரைக்கிறார்.
மனிதனின் மானத்தை மறைக்க ஆடை வழங்குவது நூல். அவனை சமுதாயத்தில் மானத்தை காத்து வாழ்ந்திட நெறிப்படுத்துது நீதி நூல்கள். தன் நிலையில் தாழாமையும், தாழ்ந்த பின் வாழாமையும் மானம் எனப்படும். எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையன்று, இப்படித்தான் வாழ வேண்டும் என்பதே வாழ்க்கை. அத்தகைய ஒழுக்க நெறிகளை வழங்குவது நூல்கள்.
இந்த உலகைப் புரிந்து கொள்ள மனிதனுக்கு உள்ள எளிமையான சாதனம் புத்தகம். விலையை வைத்து தரத்தை மதிப்பிட முடியாத பொருள் புத்தகம். புத்தகத்தின் அதன் விலையிலோ பக்கங்களின் எண்ணிக்கையிலோ, அட்டையின் ரகத்திலோ இல்லை. மாறாக படப்போரது மனதில் அது ஏற்படுத்தும் தாக்கத்தில் உள்ளது. அத்தகைய தாக்கத்தைக் கொண்டே புத்தகம் வாசிக்கப்படுகின்றது. பரவலாக்கப்படுகின்றது.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகிறது என்றார் மகாத்மா. ‘நூல் பல கல்’ என்றார் ஔவை மூதாட்டி. “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்றார் வள்ளுவர். குறள் வழி நின்று கற்க வேண்டிய நூல்களை கசடறக் கற்று கற்ற நூல்களின் பொருளறிந்து அதன்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
“காலம் என்னும் ஆழ்கடலில் நீந்துகிறவனுக்கு அறிவு என்னும் துறைமுகத்தை அடையக் கலங்கரை விளக்காக அமைந்துள்ளவை சிறந்த நூல்களே’ என்றார். கவி தாகூர். நூல்களுடன் ஒருவன் வளராவிட்டால் அது அவனுக்கு பேரிழப்பாகும் என்றார் ஆப்ரகாம் லிங்கன்.
பட்டத்துக்காக, பதவிக்காக மட்டும் என்று இல்லாமல், ஒன்றை நம்பி ஏற்றுக்கொள்ள, ஒதுக்கித் தள்ள, மறுத்துக் கூற விவாதித்து பேச போன்றவற்றிற்காகவும் நாம் வாசிக்க வேண்டும். ஏராளமான புத்தகங்கள் உங்கள் வாசிப்பிற்காக காத்துக்கிடக்கின்றன. மேன்மை மிக்க சமுதாயத்தை உருவாக்க இன்றே, இப்போதே நீங்கள் படிக்கத் தொடங்குங்கள், உங்களைச் சேர்ந்தவர்களை படிக்கச் சொல்லுங்கள். காற்றை சுவாசித்தால் உயிர் வாழலாம் வாசிப்பை சுவாசித்தால் மனிதனாக வாழலாம்.
கட்டுரையாளர் பாரதியார் பல்கலையில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராக கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள 74 மாணவர்களோடு இணைந்து பணியாற்றியவர். தற்போது சி.பி.எம். கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கு தமிழக அரசு இரண்டு விருதுகளையும், பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலா ஒரு விருதும் வழங்கி கௌரவித்துள்ளன.
அகில இந்திய வானொலி மற்றும் ஞானவாணி பண்பலை வானொலியில் 100க்கும் மேற்பட்ட நிகழ்சிகளை வழங்கி உள்ளார். தினமணி உள்ளிட்ட நாளிதழ்கள் மற்றும் மாத இதழ்களில் சுமார் 80 கட்டுரைகள் படைத்துள்ளார். அண்மையில் கிராமப்புற நூலகங்களுக்காக 5 லட்சம் புத்தகங்களை சேகரித்த பாரதியார் பல்கலையின் ‘படித்ததை பிறருக்கு படிக்கக் கொடுப்போம்’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். ஞானவாணியில் ‘ஆலோசனை நேரம்’ எனும் நேரடி நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களின் வாழ்க்கைத் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்கி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக