செவ்வாய், 10 நவம்பர், 2015

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!!
********************************************************
வாகன காப்பீடு: முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்
*******************************************************
சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியமானது. வாகன காப்பீடு, அதன் அவசியம், பயன்கள் உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மேலும், வாகனக் காப்பீட்டில் இருக்கும் சில முக்கிய தகவல்கள் மற்றும் இழப்பீடு கோருவதற்கான முறைகளையும் பார்க்கலாம்.
மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் என்றால் என்ன?
****************************************
சாலைகளில் இயக்கப்படும் கார், லாரி, மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் அவசர காலத்தில் பணப் பாதுகாப்பை வழங்கும் வகையில் வாகன காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. வாகனத்தில் ஏற்படும் திடீர் பாதிப்புகள், விபத்துக்களின் போது ஏற்படும் சேதங்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு வாகன காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் பணப் பாதுகாப்பை பெற முடியும். விபத்தினால் மட்டுமின்றி வாகனங்கள் திருடு போகும்போதும் இந்த காப்பீடு மூலம் இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்புகளையும் வாகன காப்பீட்டு திட்டங்கள் கொண்டுள்ளன.
வாகன காப்பீட்டின் அவசியம் என்ன?
**********************************
விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள், திருட்டு போன்ற எதிர்பாராத தருணங்களில் அதிக விலை மதிப்பு கொண்ட வாகனங்களில் ஏற்படும் திடீர் பாதிப்புகளுக்கு பணப் பாதுகாப்பை வாகன காப்பீடு வழங்குகின்றன. மேலும், எதிரில் வரும் வாகனங்கள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் நம்மால் ஏற்படும் இழப்புகளுக்கு இந்த காப்பீடு மூலம் இழப்பீடு பெற்றுத் தர முடியும். இதற்கு மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் அவசியமாகிறது.
வாகன காப்பீட்டு திட்டத்தின் கால அளவு?
***************************************
பொதுவாக, மோட்டார் வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் ஓர் ஆண்டு செல்லத்தக்க கால அளவை கொண்டிருக்கும். ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
வாகன காப்பீட்டு திட்டத்தின் வகைகள் என்ன?
*******************************************
இரண்டு வகையான வாகன காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது, மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம், இரண்டாவது, ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டுத் திட்டம். இதில், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் அவசியமானது. ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டமானது ஒட்டுமொத்த இழப்பீடுகளை பெற வழி வகை உள்ளதால் அவசர சமயங்களில் மிகுந்த உதவிகரமாக இருக்கும்.
பிரிமியம் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்?
***********************************************
எஞ்சினின் சிசி எனப்படும் கியூபிக் திறன் வாகனத்தின் வயது பகுதி வாகன மாடல் ஐடிவி எனப்படும் காப்புத் தொகை மதிப்பு
மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?
*********************************************
வாகனங்களால் எதிரில் வருபவர்க்கும், பொருட்களுக்கும் இழப்பீடு கோரும் காப்பீட்டு திட்டத்துக்கு மூன்றாம் நபர் காப்பீடு எனப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாலிசிதாரரால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் நிரந்தர ஊனம், இறப்பு மற்றும் பொருட்சேதங்களுக்கு இழப்பீடு வழங்க இயலும். உங்களது வாகனத்தால் ஏற்படும் எதிரில் வருபவர்களுக்கும், பொருட்களுக்கும் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் இழப்பீடு கோர முடியும். ஆனால், பாலிசிதாரரின் வாகனத்திற்கும், அவருக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடைக்காது. மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தில் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் வரையிலும், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரையிலும் இழப்பீடு கோர முடியும்.
ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டம்
***************************************
மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தைவிட கூடுதல் பயனளிக்கும் திட்டம் இது. மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் பணப் பாதுகாப்பையும் சேர்த்து உங்களது வாகனத்திற்கு விபத்து, தீ விபத்து, வெள்ளம், நில நடுக்கம், வன்முறை சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்படும் திடீர் பாதிப்புகளுக்கு இந்த ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் பணப் பாதுகாப்பை பெற முடியும். இதுதவிர, காரின் மியூசிக் சிஸ்டம், ஏசி உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்களுக்கும் காப்பீடு செய்துகொள்ள முடியும். இதற்காக, கூடுதல் பிரிமியம் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
நோ கிளெய்ம் போனஸின்(NCB) பயன்கள் என்ன?
***********************************************
பாலிசியின் ஓர் ஆண்டு காலத்தில் இழப்பீடு கோரவில்லையெனில், புதுப்பிக்கும்போது வழங்கப்படும் தள்ளுபடிதான் நோ கிளெய்ம் போனஸ் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பாலிசி புதுப்பித்துக் கொண்டே வரும்போது அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நோ கிளெய்ம் போனஸ் எனப்படும் தள்ளுபடியை ஒரு பாலிசியில் பெறலாம். அதன் விபரத்தை கீழே காணலாம்.
நோ கிளெய்ம் போனஸ் தள்ளுபடி விபரம்
***************************************
முதல் ஆண்டு பாலிசியில் இழப்பீடு கோராதபட்சத்தில் புதுப்பிக்கும்போது 20 சதவீத தள்ளுபடி தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 25 சதவீதம் தள்ளுபடி தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 35 சதவீத தள்ளுபடி தொடர்ந்து நான்காண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 45 சதவீத தள்ளுபடி தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 50 சதவீத தள்ளுபடி
வாகன பழுது காப்பீட்டு திட்டம்
*****************************
விபத்து, இயற்கை சீற்றங்களை தவிர்த்து வாகனங்களில் திடீரென ஏற்படும் பழுது மற்றும் தேய்மான பாகங்களை மாற்றித் தரும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு பணப் பாதுகாப்பு தரும் காப்பீட்டு திட்டம் இது. இதில், வாகனத்தில் ஏற்படும் திடீர் பழுது மற்றும் தேய்மான பாகங்களுக்கான காப்பீட்டு ஆகியவற்றை தனித்தனியாகவும் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அனைத்து பழுது மற்றும தேய்மான பாகங்களுக்கான இழப்பீட்டை இந்த திட்டங்கள் மூலம் பெறலாம்.
இழப்பீடு கோரும் முறைகள்
**************************
வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் இழப்பீடு கோரும்போது முறையான ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். காப்பீட்டு ஆவணம், வாகனத்தின் பதிவு சான்று, விபத்தின்போது ஓட்டியவரின் ஓட்டுனர் உரிமம், பாதிப்புகளின் விபரம் குறித்து சர்வீஸ் மையத்திலிருந்து எவ்வளவு செலவாகும் என்று அளிக்கப்படும் ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பீட்டாளர் ஆய்வு
********************
ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் ஒருவர் வாகனம் மற்றும் இதர பாதிப்புகள், சேதாரங்களை மதிப்பீடு செய்வார். சர்வீஸ் மையத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் இழப்பீடுக்கான தொகை சரியாக உள்ளதா என்பதையும் ஒப்பிட்டு பார்த்து காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிப்பார். அதன்பிறகே, வாகனத்தை சரி செய்ய முடியும். வாகனத்தை சரிசெய்த பின்னர் சர்வீஸ் மையத்திலிருந்து வழங்கப்படும் ஒரிஜினல் ரசீதுகளை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும். காரை டெலிவிரி எடுக்கும்போது மீண்டும் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் இழப்பீடு கோரிய பாகங்கள் மாற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார்.
திருடு போனால்...
****************
கார் திருடுபோகும் பட்சத்தில், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு, காப்பீட்டு நிறுவனத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், கார் திருடுபோகும்போது அதற்கான இழப்பீட்டை உடனடியாக பெற இயலாது. காரை கண்டுபிடித்து தருவதற்கு காவல் நிலையத்தில் குறிப்பிட்ட கால அவகாசம் கேட்பார்கள். அந்த கால அளவை தாண்டிய பின்னரே காரை கண்டுபிடித்து தர முடியவில்லை என்று சான்று வழங்குவார்கள். அந்த சான்றையும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து ஒரு சான்றையும் பெற்று காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக